PULSAR 150 vs AS 200

இளைஞர்கள் மனதில், பல்ஸர் என்ற பெயர் மறக்க ஆரம்பித்திருக்கும் தருணத்தில், விழித்துக் கொண்டிருக்கிறது பஜாஜ். ‘ரேஸ் ஸ்போர்ட்’ என்ற பெயரில் 200 சிசி நேக்கட் பைக்கை அறிமுகப்படுத்திய பஜாஜ், இப்போது ‘அட்வென்ச்சர் ஸ்போர்ட்’ என்ற பெயரில், ஒரே நேரத்தில் 150 சிசி பல்ஸரையும், 200 சிசி பல்ஸரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இரண்டு பல்ஸர்களும் எவ்வளவு அட்வென்ச்சரஸ் ஆக இருக்கிறது என்று பார்ப்போம்!

டிஸைன்

AS150 மற்றும் AS200 பைக்குகளை, ட்வின்ஸ் என்றே சொல்லலாம். இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் தோற்றத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. பைக்கின் முன்பக்க ஃபேரிங் கொஞ்சம் மிரட்டலான, அதே சமயம் அட்வென்ச்சர் என்ற பெயரை நியாயப்படுத்த, பெரிய வைஸரையும் கொண்டிருக்கின்றன. இரண்டிலுமே புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ்.

ஆனால், பெட்ரோல் டேங்க்குக்குப் பிறகு, இரண்டுமே மிகவும் பழக்கமான பழைய பல்ஸர்கள் போலவே இருக்கின்றன. பெட்ரோல் டேங்க், சைடு பேனல்கள், பின்பக்கம் அனைத்துமே பல்ஸர் NS200 பைக்கில் இருப்பதுதான். இன்ஜின் கில் சுவிட்ச், அதன் பின்னால் ஒளிரும் விளக்குகள் என பல்ஸருக்கே உண்டான அம்சங்கள் இதிலும் தொடர்கின்றன. கைப்பிடிகள், லீவர்கள், சுவிட்ச்சுகள் அனைத்தும் தரமாக இருக்கின்றன. இரண்டு பைக்குகளுமே ஸ்டைலாகவும், அதே சமயம் எந்த ஆங்கிளில் இருந்து பார்த்தாலும் முழுமையாகவும் இருக்கின்றன.

ரைடிங் பொசிஷன் இரண்டிலுமே சிறப்பாக இருக்கின்றன. ஹேண்டில்பார் உயரமாக வைக்கப்பட்டிருப்பதால், குனிந்து ஓட்ட வேண்டிய தொல்லை இல்லை. நீண்ட நேரம் தொடர்ந்து ஓட்டினாலும் களைப்பு தெரியவில்லை.

இன்ஜின்

ரேஸ் ஸ்போர்ட் பல்ஸர் 200 பைக்கில் இருக்கும் ஃப்யூல் இன்ஜெக்ஷன் இன்ஜினுக்குப் பதிலாக, NS200 பைக்கில் இருக்கும் கார்புரேட்டர் இன்ஜின்தான் பல்ஸர் AS200 பைக்கில் இடம்பிடித்திருக்கிறது. இன்ஜினிலும் எந்த ட்யூனிங் மாற்றங்களும் இல்லை. இதனால் 199.5 சிசி திறன்கொண்ட இந்த இன்ஜின், அதிகபட்சமாக 23.2bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பல்ஸரில், கியர் ஷிஃப்ட் ஈஸியாகவே இருக்கிறது. அதனால், நீங்கள் பல்ஸர் NS200 பைக்கை ஓட்டியிருந்தால், பல்ஸர் AS200 பைக்கின் பெர்ஃபாமென்ஸ் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஆரம்ப வேகம் முதலே பவர் டெலிவரி மிகச் சீராக இருப்பதால், நகருக்குள் ஓட்டவும், நெடுஞ்சாலைகளில் பறக்கவும் ஏற்ற பைக்காக இருக்கிறது AS200. பல்ஸருக்கே உரிய உறுமல் சத்தம், இந்த பைக்கின் பலங்களில் ஒன்று. முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன், பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷன், டயர்கள் அனைத்துமே NS200 பைக்கில் உள்ள அதே ஸ்பெசிபிக்கேஷன்தான். அகலமான 100/80 செக்‌ஷன் பின்பக்க டயர், பைக்கின் ஸ்டெபிளிட்டிக்குக் கைகொடுக்கும். ஆனால், இதுவே திருப்பங்களில் வளைத்துத் திருப்பி ஓட்டும்போது, பைக்குக்குக் கொஞ்சம் ஹெவியான ஃபீல் கொடுக்கிறது. மேலும், இந்த பைக்கில் இடம்பிடித்திருக்கும் யுரோகிரிப் டயர்களின் தரம் சுமாராக இருக்கின்றன. NS200 பைக்கில் இருந்த ஏபிஎஸ் பிரேக்ஸ் ஆப்ஷன், இதில் இல்லை.

உண்மையான மாற்றங்கள் நிகழ்ந்திருப்பது AS150 பைக்கில்தான். 149.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், ட்வின் ஸ்பார்க், 4 வால்வு இன்ஜின் முழுக்க முழுக்க புத்தம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த இன்ஜின் 9500ஆர்பிஎம்-ல் 16.8bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 150சிசி பைக்குகளில் இது கிட்டத்தட்ட யமஹா ஆர்15 பைக்கின் பவருடன் போட்டி போடுகிறது.

இதற்கு முன்னால் வந்த பல்ஸர் 150சிசி பைக்குகளைவிட, AS150 பல்ஸரின் இன்ஜின் ஸ்மூத்தாகவும், பழைய பல்ஸரில் இருந்த திடீர் சீறல்கள் எதுவும் இல்லாமல், பவர் டெலிவரி ஒரே சீராகவும் இருக்கிறது.

AS150 பைக்கின் முன்பக்கம் மெல்லிய டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளதோடு, பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் இடம் பெற்றுள்ளது. முன்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக் இடம் பெற்றிருக்கிறது. AS200 பைக்கில் பின்பக்கமும் டிஸ்க் பிரேக் இருக்க, AS150-ல் பின்பக்கம் டிரம் பிரேக் மட்டுமே!

200 பைக்கைவிட 150 பல்ஸரின் எடை 10 கிலோ குறைவு என்பதோடு, க்ரிப்பான எம்ஆர்எஃப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளதால், வளைத்து நெளித்து ஓட்டவும், வேகமாகப் பறக்கவும் ஏற்ற பைக்காக இருக்கிறது AS150.

முதல் தீர்ப்பு

பல்ஸர் பைக் இந்தியா முழுக்கப் பரவக் காரணம், இதன் ஆல்ரவுண்ட் பெர்­ஃபாமென்ஸ்தான். ஸ்டைல், சிறப்பம்சங்கள், மைலேஜ் என்பதைத் தாண்டி, ஓட்டுவதற்கு மிகவும் வசதியான பைக் என்பது பல்ஸரின் பலம். அது இந்த இரண்டு பைக்குகளிலுமே அளவில்லாமல் கிடைக்-கின்றன. அட்வென்ச்சர் பைக் எனும்போது, சஸ்பென்-ஷனிலும் டயர்களிலும் மாற்றங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால், இதை எதையும் செய்யாமல் பெயரை மட்டுமே அட்வென்ச்சர் ஸ்போர்ட் என மாற்றியிருப்பதுதான் மைனஸ்.

அட்வென்ச்சர் என்ற பெயரை மறந்துவிட்டு, கொஞ்சம் ஸ்டைலான பல்ஸர் வேண்டும் என்பவர்களுக்கு AS150, AS200 இரண்டுமே நல்ல சாய்ஸ்!