VOLVO XC90

வால்வோ கார்களின் முகம் என்றே XC90 காரைக் குறிப்பிடலாம். அந்த அளவுக்கு வால்வோ வாடிக்கையாளர்களின் ஏகபோக மதிப்பைப் பெற்ற 7 சீட்டர் எஸ்யுவி XC90. ஏர்பேக், டச் ஸ்கிரீன், சன்ரூஃப் போன்றவை எல்லாம் எல்லா சொகுசு கார்களிலும் இருப்பதுதான். ஆனால், இந்த அம்சங்கள் XC90 காரில் இடம்பெறும்போது, அவை தனித்துவம் பெற்றுவிடும். XC90 காரில் இடம்பெற்றிருக்கும் டேப்லெட் சைஸ் டச் ஸ்கிரீனிலேயே சகல கன்ட்ரோல்களும் அடங்கிவிடுவதால், சென்டர் கன்ஸோலை அடைத்துக் கொண்டிருக்கும் பல திருகுகளுக்குத் தேவையே இல்லாமல் போய்விட்டது. அதனால், டேஷ் போர்டுக்குக் கூடுதல் அழகு கிடைக்கிறது. மியூஸிக் அகாடமி யில் முதல் வரிசை யில் அமர்ந்து ஒரு கச்சேரியைக் கேட்டால் என்ன உணர்வு கிடைக்குமோ, அதே உணர்வை இந்த காரில் இருக்கும் 19 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம் கொடுக்கிறது.

இப்படி பல வகையிலும் காரை ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலாகவே மாற்றியிருக்கிறார்கள். இதில் ‘பிரளி நாய்ஸ் கேன்ஸலிங் சிஸ்டம் டயர்ஸ்’ பொருத்தப்பட்டுள்ளன. வேகமாகச் செல்லும்போது டயரின் சத்தம் காருக்குள் ஓரளவுக்குக் கேட்பது இயல்பு. அந்தச் சத்தத்தைக் குறைப்பதுதான் இந்தத் தொழில்நுட்பத்தின் வேலை. ஃபார்முலா-1 கார்களின் டயர்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் அதே யுக்தியைப் பயன்படுத்தி, XC90 கார்களின் டயர்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

77.9 லட்சம் விலை கொண்ட XC90 காரின் இன்ஸ்க்ரிப்ஷன் வேரியன்ட்டில் 225bhp சக்தியையும், 470Nm டார்க்கையும் கொடுக் கும் 4 சிலிண்டர்கள் கொண்ட 2 லிட்டர் இன்ஜின் இருக்கிறது.