YAMAHA FASCINO

ஃபஸினோ மிஸ் Diva அழகிப் போட்டியை யமஹா நடத்தியபோதே நாம் யூகித்திருக்க வேண்டும் – யமஹாவின் அடுத்த ஸ்கூட்டரின் பெயர் ‘ஃபஸினோ’ என்று. அழகிப் போட்டிகளில் வெட்கத்துடன் வெற்றி பெறும் மங்கையரைப்போன்று, அழகாக இருக்கிறது யமஹா ஃபஸினோ.

பியாஜியோ வெஸ்பாவின் தனித்துவமான ஸ்டைலிங்தான், இந்த ஸ்கூட்டருக்கு இன்ஸ்பிரேஷன் என்பது புரிகிறது. முழுக்கவே ஸ்டைலுக்காக ஸ்கூட்டர் வாங்குபவர்களை மட்டும் நம்பி, ஃபஸினோவைக் களமிறக்கியிருக்கிறது யமஹா. ‘ரெட்ரோ’ ஸ்டைல் ஹெட்லைட்ஸ், மாடர்னாகவும் இருப்பது சூப்பர். இண்டிகேட்டர் லைட்டுகள் பெரிதாக உள்ளன. அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ஸ்பீடோ மீட்டர், ஓடோ மீட்டர், ஃப்யூல் மீட்டர்கள் உள்ளன. ரியர் வியூ மிரர்களுக்கு க்ரோம் ஃபினிஷ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இருக்கைக்கு அடியில், சின்ன ஹெல்மெட் ஒன்றை வைத்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு 21 லிட்டர் கொள்ளளவு இடவசதி உள்ளது. பாட்டில் ஹோல்டர்கூட உண்டு.

ஃபஸினோ ஸ்கூட்டரில் இருப்பது ரே, ஆல்ஃபா ஸ்கூட்டர்களில் உள்ள 113 சிசி, 4-ஸ்ட்ரோக், கார்புரேட்டர் ப்ளூகோர் இன்ஜின்தான். இது 7 bhp சக்தியை 7,500 ஆர்பிஎம்-லும், 0.8 kgm டார்க்கையும் அளிக்கிறது. ஸ்கூட்டரின் எடை 103 கிலோ.

முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் உள்ளதால், ரே-Z ஸ்கூட்டரைப் போலவே நல்ல ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இருக்கையின் உயரம் (775 மிமீ) சுஸூகி லெட்ஸ், ஹோண்டா ஆக்டிவா-i போன்ற ஸ்கூட்டர்களைவிட அதிகமாக இருந்தாலும், இருக்கையின் சொகுசு நன்றாக இருக்கிறது. 5.2 லிட்டர் பெட்ரோல் டேங்க் போதுமானதாக இருக்கும்.

வழக்கமான ஒரு ஸ்கூட்டருக்கே உரிய வசதிகளைக்கொண்டிருக்கிறது யமஹா ஃபஸினோ. இந்த ஸ்கூட்டரின் டிஸைனைப் பொறுத்தவரை வாடிக்கையாளரின் தீர்ப்பே இறுதியானது. ஆனால், இன்ஜின் விஷயத்தில் நம்மை ஏமாற்றாது ஃபஸினோ. முழுவதாக டெஸ்ட் செய்தால்தான் மைலேஜ், ஓட்டுதல் தரம் போன்றவற்றைப் பற்றிச் சொல்ல முடியும். ஸ்கூட்டரின் விலை 63,000 ருபாய்.