மஞ்சுதேவி…. கூலி நம்பர் 15

ழைத்து வாழவேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே” – இந்த திரைப்பாடல் வரிகளுக்கு நடமாடும் உதாரணமாக இருக்கிறார், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மஞ்சுதேவி. [wysija_form id=”1″]

ஜெய்ப்பூர் ரயில்நிலையம், சீறி வரும் ரயில்களின் பெட்டியில் இருந்து இறங்கும் பயணிகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் சிவப்பு ஷர்ட் வலது கையில் பேட்ஜ் குத்திக்கொண்டு வரிசையாக போர்ட்டர்கள். கூலி என்றால் ஆண்கள்தான் இருப்பார்கள். அதிசயமாக நடுவில், ஓர் பெண் போர்ட்டர் இருப்பதைக் காணலாம்.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கனமான லக்கேஜுகளை தூக்குவது இந்த ஆண் போர்ட்டர்கள்தான். இந்தக் கடின வேலையை ஒரு பெண் செய்கிறார் என்றால், ஆச்சர்யமான விஷயம்தானே.

எவ்வளவு கஷ்டம் வந்திருந்தால், மிருதுவான கைகளால் மூட்டை முடிச்சுகளைத் தூக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். தன் வாழ்க்கையில் நேர்ந்த சோகத்தை நினைத்து சோர்ந்துவிடாமல், இதுவரை எந்தப் பெண்ணும் செய்ய யோசிக்கும் வேலையைச் செய்யத் துணிந்துவிட்டார் மஞ்சுதேவி.

ஜெய்ப்பூருக்கு அருகில் உள்ள சுந்தர்பூரில் கணவன், மூன்று பிள்ளைகளோடு சந்தோஷமாக வாழ்க்கை வாழ்ந்தவர்தான் மஞ்சுதேவி.  கணவர் மஹதீப்புக்கு, ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் போர்ட்டராக வேலை. கல்லீரல் வியாதியால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.  என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றபோது, ”உன் கணவர் செய்த வேலையை கேட்டுப் பார்” உனக்குத் தருவார்கள். என்று ஒருவர் ஐடியா கொடுத்தார். தன் கணவரின் நண்பர்களுடன் சென்று, போர்ட்டர்களுக்கான யூனியனில் பேசினார். அவர்களின் உதவியோடு, அரசாங்கத்திடம் அனுமதி பெற்றார். இப்போது அவர் கையில், ‘போர்ட்டர் நெம்பர் 15’ .இது, அவர் கணவருடைய பேட்ஜ் நெம்பர்.

அத்தனை ஆண்களின் நடுவில் உட்கார்ந்திருப்பது, தன்னுடைய டேர்ம் வரும் வரை காத்திருப்பது, அதை எல்லோரும் விந்தையாகப் பார்ப்பது என்பதெல்லாம் ஆரம்பத்தில் பிடிக்காமல் சிரமப்பட்டார் மஞ்சுதேவி. வறுமை அவர் மீது சகிப்புத்தன்மையை வலுக்கட்டாயமாக திணித்தது. வீட்டுக்குச் சென்றதும் அழுவார்.

ஒரு நாள்,மஞ்சுதேவி வேலை செய்யும் இடத்துக்கு வந்த அவர் அம்மா ”ஒரு வேலை செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், அதில் உள்ள நல்லது கெட்டதை எதிர்கொள்ளவேண்டும். விதி உன்னை ஏமாற்றியது. அது ஏமாற்றத்தை உன் குழந்தைகளுக்கும் தந்துவிடாதே ” என்றார்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த நொடி முதல் தன் குழந்தைகளைக் காப்பாற்ற எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சந்திப்பேன் என உறுதி எடுத்துக்கொண்டார் மஞ்சுதேவி.

கூலி வேலை செய்ய நினைப்பது சுலபம். ஆனால், அந்த வேலையைச் செய்யும்போதுதான் அதன் கஷ்டம் தெரியும் என்று இந்த வேலைக்கு வந்த சிறுது நாட்களியே உணர்தார் மஞ்சுதேவி. முதலில், சிறு சிறு பெட்டிகளைத் தூக்கக்கூட சக்தி கிடையாது. அதிக லக்கேஜுகள் வந்துவிட்டால், ஒரு வண்டியில் போட்டு இழுக்கவும் முடியாது. இவர் படும் கஷ்டத்தைப் பார்த்து, கூட இருக்கும் கூலி ஆட்கள் உதவ முன்வருவதைப் பார்த்து, புது உற்சாகம் அடைவார்.

ஆண்கள் மத்தியில் வேலை செய்ய கூச்சப்பட்டவர்,  அவர்களும் நல்லவர்களே… உதவி செய்யும் குணம் படைத்தவர்களே என்று தெரிந்துகொண்ட பிறகு, அவர்களோடு நட்பாகப் பழக ஆரம்பித்தார். சுலபமாக எப்படி வேலை செய்யவது என்ற நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, இப்போது அவர்களுக்கு இணையாக வேலை செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.

மஞ்சு என்ற பெயரைச் சொன்னால், ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் தெரியாதவர்களே இல்லை. எல்லோரும் அவரை சகோதரி என்றே கூப்பிடுகிறார்கள். ஆனால், இப்போதும் சில பயணிகள் பொம்பளை போர்ட்டரா? ”நீ எப்படி தூக்குவாய்” என்று கேட்கும்போது. அவள் எந்தப் பதிலும் கூறாமல் கடகடவென லக்கேஜுகளைத் தூக்கிச்செல்வதைப் பார்த்து, மூக்கின் மேல் விரல்வைத்து மறுவார்த்தை பேசமாட்டார்கள்.

உலகில் செய்ய முடியாத வேலை என்று எதுவுமே இல்லை. வேலைக்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. உடல் பலத்தோடு மன பலம் சேர்ந்தால், நம்மைத் தடுக்க எந்த சக்தியும் கிடையாது என்கிறார் மஞ்சுதேவி.

[wysija_form id=”1″]