இனோவாவின் திறக்காத காற்றுப் பைகள் !

மதியம் ரெண்டு மணிக்குள்ள சென்னைக்குப் போகோணும்னு நெனைச்சேன். இப்போ ரெண்டு மாசம் ஆகப் போகுது! இன்னும் யாரும் வீட்டுக்குக்கூடப் போகலைங்க சார்!’’ என்று சோகமாக ஆரம்பித்தார் சடகோபால். கோவையில் பிசினஸ்மேனாக இருக்கும் சடகோபால், தனது குடும்பத்துடன் சென்னைக்குச் செல்லும் வழியில், வாழப்பாடி அருகே மிகப் பெரிய விபத்தைச் சந்தித்திருக்கிறார். மனைவி கோமா நிலையிலும், கார் ஓட்டிய தனது மகன், இடுப்புக்குக் கீழும் கை கால்கள் முறிந்தும் ஆளுக்கொரு பக்கமாகக் கிடக்கிறார்கள்.

காற்றுப் பை விஷயத்தில் சடகோபாலைப் பழி வாங்கியிருக்கிறது, 19 லட்ச ரூபாய் விலைகொண்ட டொயோட்டா இனோவா.

‘‘உடம்புல எந்த அடியும் வாங்கலைன்னாலும், மனசால ரொம்ப அடிபட்டுக் கிடக்கேனுங்க!’’ என்று சொன்ன சடகோபால், தனது குடும்பத்தினரையும், காரையும் மீட்கப் போராடி வரும் சோகக் கதையைச் சொன்னார். ‘‘பில்டு குவாலிட்டியில சூப்பர்; ரெண்டு ஏர் பேக்; ஏபிஎஸ்னு நான் இனோவா வாங்கும்போது, 18 லட்ச ரூபாய்ங்க! 8,500 கிலோ மீட்டர் ஓட்டிட்டேன். போன மாசம்தான் முன் பக்கம் மிஷ்லின் டயர் மாத்தினேன். சென்னையில ஒரு சுபகாரியத்துக்காக நான், என் மகன், மனைவி மூணு பேர் மட்டும் இனோவாவுல கிளம்பினோம். என் மகன் ஸ்ரீ ஹரிக்கு கார் ஓட்டுறதுன்னா ரொம்பப் பிடிக்கும். வழக்கம்போல அவன்தான் காரை ஓட்டினான். வாழப்பாடி தாண்டறதுக்குள்ள எங்க வாழ்க்கையே மாறிடுச்சு!’’ என்று நிறுத்தியவர், கண்ணீரைத் துடைத்துவிட்டுத் தொடர்ந்தார். ‘‘வாழப்பாடி – எல்லோருமே கவனமா க்ராஸ் பண்ண வேண்டிய இடம். ஏன்னா, அந்த ஓவர் பிரிட்ஜ்க்குக் கீழே வழி கிடையாது. இப்போகூட அது சம்பந்தமா கேஸ் நடக்குதுன்னு நெனைக்கிறேன். சென்னையில் இருந்து வந்த லாரி ஒண்ணு, வாழப்பாடிக்கு வலது பக்கமா திரும்ப, எங்க கார் கிட்டத்தட்ட 80 கி.மீ வேகத்தில் போகுது. லாரிக்காரர் திரும்புற இடத்துலேயாவது ஸ்பீடைக் குறைச்சிருக்கலாம். திரும்பிய வேகத்தில லாரி இடிச்சதுல, ஹரி ரத்தச் சகதியாகிட்டான். லாரிக்காரன் இடிச்சுட்டு ஓடிட்டான்.

அப்புறம் ஃபயர் ஸ்டேஷன் ஆட்கள் வந்தபிறகு, ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் அவனை சீட்டிலிருந்து ரெஸ்க்யூ பண்ணாங்க. இதுல கொடுமை என்னன்னா, கார்ல இருந்து ஒரு ஏர்பேக் கூட ஓப்பன் ஆகலை. நான் இடது பக்கம் இருந்ததால, எனக்குப் பெருசா எதுவும் அடிபடலை. என் மனைவியும் ரொம்ப ஆபத்தான நிலையிலதான் இருக்காங்க. அட்லீஸ்ட் – ஒரு ஏர் பேக்காவது ஓப்பன் ஆகியிருந்தா, இந்தளவுக்கு என் மகனுக்கு அடிபட்டிருக்காது.
ஷோரூம்ல இது பத்திக் கேட்டா, ‘இனோவாவில் சென்ஸார் முன் பக்கம் இருக்கு. கரெக்ட்டா சென்ஸார்ல அடிபட்டாதான் ஓப்பன் ஆகும்’னு கூலா சொல்றாங்க. அடிபடும்போது, சென்ஸார் பார்த்தா இடிக்க முடியும்? இதுகூடப் பரவாயில்லை. ‘ஃபார்மாலிட்டீஸ் இப்போ பண்ண முடியாது. சர்வேயர் வந்து மொத்த எஸ்டிமேட் போடுற வரைக்கும் ஷோரூம் சர்வீஸ் சார்ஜ் ஒரு நாளைக்கு 200 ரூபாய் + டேக்ஸ் கட்ட வேண்டியிருக்கும்’னும் சொல்றாங்க சர்வீஸ் சென்டர்ல. கார், என் மனைவி பேர்லதான் இருக்கு. ‘உங்ககிட்ட ரெஸ்பான்ஸ் சரியில்லை; உங்களை வெச்சுத்தான் எஸ்டிமேட் போடணும்’னு ஆஸ்பத்திரியில் இருக்கிற என் மனைவிக்கு சர்வீஸ்ல இருந்து லெட்டர் போடுறாங்க. என் மனைவி வந்து கையெழுத்து போட்டாதான் ஃபார்மாலிட்டீஸ் நடக்குமாம். கார் வெயிட்டிங் சார்ஜ் + டேக்ஸ் + கொட்டேஷன்ல 10% சார்ஜ்… இது பத்தியேதான் எங்கிட்ட பேசுறாங்க.

இப்போ கார் டோட்டல் லாஸ் ஆகிடுச்சு. என் மகனுக்கு வாழ்க்கையே போயிடுச்சு. அவன் எழுந்திருச்சி நடக்கவே இன்னும் ஒரு வருஷம் ஆகலாம்னு டாக்டருங்க சொல்றாங்க!’’ என்று நொந்து போய்ச் சொன்னார்.
‘‘எங்களுக்குனு சில விதிமுறைகள் இருக்கு?”

‘‘சில லட்சங்கள் அதிகம் ஆனாலும், பாதுகாப்பு முக்கியம் என்பதால்தான் காற்றுப் பைகள் கொண்ட காரை வாங்குகிறார்கள். அதுவே இப்படிச் சொதப்பலாமா?’’ என்று கோவையில் உள்ள ஆனைமலை டொயோட்டா சர்வீஸ் மேனேஜர் செய்யதுவிடம் கேட்டோம்.

‘‘இதை நாங்கள் ஏற்கெனவே கஸ்டமரிடம் பேசிவிட்டோம். காரின் வலதுபக்கம் அடிபட்டிருக் கிறது. சென்ஸார் அருகில் அடிபட்டால்தான் காற்றுப் பைகள் திறக்கும். மேலும், எங்கள் ஷோரூமுக்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அதைத்தான் எடுத்துச் சொன் னோம்!’’ என்று விறுவிறுவெனச் சொல்லி முடித்தார்.