டுகாட்டி மான்ஸ்ட்டர் 821

டுகாட்டியின் புதிய என்ட்ரி லெவல் பைக்காக அறிமுகமாகியிருக்கிறது, மான்ஸ்ட்டர் 821. என்ட்ரி லெவல் என்றால், சிட்டி டிராஃபிக்கில் ஓட்ட நன்றாக இருக்க வேண்டும். இது எப்படி இருக்கிறது?

டிஸைன்

பழைய மான்ஸ்ட்டர் பைக்குகளைவிட பெரிதாக, கட்டுமஸ்தாக இருக்கிறது புதிய மான்ஸ்ட்டர் 821. புதிய 821 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் சேர்க்கப்பட்டதால், பைக்கின் வீல்பேஸ் மற்றும் நீளம் அதிகரித்துவிட்டன. இதனால், ஒரு விஷுவல் டேஸ்ட்டுக்காக பைக்கின் பாடி பெரிதாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 17.5 லிட்டர் பெட்ரோல் டேங்க், ரொம்பப் பெரிசு.

ஹேண்டில்பார் கிளாம்ப், கைப்பிடிகள், மிரர்கள் போன்றவை தரமாக இருக்கின்றன. எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டுகாட்டி ரேஸ் பைக்கில் இருப்பதுதான். பைக்கில் இருக்கும் சில பிளாஸ்டிக், ரப்பர் பாகங்களின் தரம், சுமார். பைக்கின் கட்டுமானத் தரம் நன்றாக இருந்தாலும், இதுபோன்ற சின்ன விஷயங்கள் தரமாக இல்லாதது உறுத்தலாக இருக்கிறது.

ஹேண்டில்பார், பழைய மான்ஸ்ட்டர் பைக்கைவிட 40 மிமீ உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. சீட் உயரத்தை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். லிக்விட் கூலிங்குக்கான ரேடியேட்டர், ஃப்ளூயிட்ஸ் போன்றவை பைக்கின் எடையை அதிகரித்துவிட்டன. மான்ஸ்ட்டர் 821 பைக்கின் எடை 205.5 கிலோ.

இன்ஜின்

821 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் 110.5 bhp சக்தியை அளிக்கிறது. பழைய மான்ஸ்ட்டர் 796 பைக்கின் ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜினைவிட இதன் டார்க் அதிகம். 6 ஸ்பீடு கியர்பாக்ஸின் கியரிங் இடைவெளி குறைவாகவே வைக்கப்பட்டுள்ளது.

‘Urban’ மோடில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சாஃப்ட்டாக இருப்பதால், சிட்டி டிராஃபிக்கை எளிதாகச் சமாளிக்கலாம். இன்ஜினின் சக்தியும் 75 bhp-ல் லிமிட் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது கியரில் 30 கி.மீ வேகத்தில் ஓட்டினாலும்கூட இன்ஜினில் தடங்கல்கள் எதுவும் இல்லை. இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின் அளவுக்கு ஸ்மூத் இல்லை இந்த L-ட்வின் இன்ஜின்.

ஆனால், நெடுஞ்சாலையில் இது வியக்க வைக்கிறது. டூரிங் மோடில் மான்ஸ்ட்டர் 821 அருமையாக இருக்கிறது. ‘ஸ்போர்ட்’ மோடில் மொத்த பவரும் வெளிப்படுவதால், செம த்ரில்லிங். 4,000 ஆர்பிஎம்-க்கு மேல் இன்ஜின் நல்ல பெர்ஃபாமென்ஸை அளிக்க, 8,000 ஆர்பிஎம்-க்கும் பவர் டெலிவரி சூப்பர். கியர் ஷிஃப்ட் தரம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். 6-வது கியரில் இருந்து டவுன்-ஷிஃப்ட் செய்யும்போது, அவ்வப்போது ஃபால்ஸ்-நியூட்ரல் விழுவது கடுப்பு.

ஓட்டுதல் தரம், கையாளுமை

அதிக வேகத்தில் ஓட்டும் போது மான்ஸ்ட்டர் 821 பைக்கின் எடையை அதிகம் உணர முடியவில்லை. ரைடிங் பொசிஷன் ஸ்போர்ட்டியாக இருப்பதால், வளைத்து ஓட்ட சிறப்பாக இருக்கிறது. ஆனால், எடை அதிகமாக இருப்பதால், செக்மென்ட்டில் கையாளுமைக்கு சிறந்த பைக்காக இருக்க வாய்ப்பு இல்லை.

முன்பக்கம் நான்-அட்ஜஸ்டபிள் 43 மிமீ ஃபோர்க்குகளும், பின்பக்கம் ப்ரீ-லோட் அட்ஜஸ்டபிள் Sachs மோனோஷாக் சஸ்பென்ஷனும் உள்ளன. புதிய சேஸிக்கு ஏற்றவாறு சஸ்பென்ஷனும் டியூன் செய்யப்பட்டுள்ளது. தார் சாலையிலும், மேடு பள்ளமான சாலைகளிலும் சஸ்பென்ஷன் சிறப்பாக இருந்தது. பைரலி டியாப்லோ ரோஸோ II டயர்கள் நல்ல க்ரிப்பை அளிக்கின்றன. முன் வீலுக்கு உள்ள ட்வின் ப்ரெம்போ 320 மிமீ டிஸ்க் பிரேக்ஸ் பர்ஃபெக்ட்

பழைய மான்ஸ்ட்டர் பைக்குகளை விட, புதிய 821 பைக் சிறப்பாகவே உள்ளது. இதன் பெர்ஃபாமென்ஸும் மிரட்டலாக இருக்க, எலெக்ட்ரானிக் தொழில்நுட்பங்கள் பைக்கை சிறப்பாகக் கையாள உதவுகின்றன. செக்மென்ட்டில் சிறப்பான பைக் என்று சொல்ல முடியாவிட்டாலும், அனைத்துவிதமான ரைடர்களுக்கும் ஏற்ற பைக்காக இருப்பதால், ‘ஓகே’ சொல்ல வைக்கிறது மான்ஸ்ட்டர் 821.